ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சினோவேக் தடுப்பூசியை 12 வயதுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கலாம்

கோலாலம்பூர், அக் 1– சினோவேக் வகை தடுப்பூசிகளை 12 வயதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு வழங்கலாம் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்று நடைபெற்ற மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் 364 வது கூட்டத்தில் இதற்கான நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

எனினும், கடும் நோய்களால் பாதிக்கப்படாத மற்றும்  ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்நோக்காத 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கு மட்டுமே தொடக்க கட்டமாக இந்த தடுப்பூசி செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இளையோருக்கு  செலுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி இதுவாகும். பைசர் பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு கடந்த ஜூன் மாதம் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சினோவேக் தடுப்பூசியை 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குச் செலுத்துவதற்கு இதற்கு முன்னதாக நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக நோர் ஹிஷாம் கூறினார்.

தடுப்பூசிக்கான நிபந்தனையுடன் கூடிய அனுமதியைப் பெறுவதற்கு அதன் தரம், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான தகவல்கள் தேவைப்படுவதோடு  ஆகக்கடைசி தரவுகளின் அடிப்படையில் அதன் ஆக்கத்தன்மையும் அடிக்கடி சோதிக்கப்படும் என்று அவர மேலும்  தெரிவித்தார்.


Pengarang :