ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

குடும்ப வருமான இலக்கை மறு ஆய்வு செய்வீர்- அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், அக் 1- வரும் 2025 ஆம் ஆண்டில்  மாத குடும்ப வருமானத்தை 10,000 வெள்ளியாக உயர்த்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கு சாத்தியமற்றது என்று எதிர்க்கட்சித்  தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

வறுமை நிலை, அதிகரித்து வரும் வேலையின்மை, நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த இலக்கை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

12வது மலேசியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த இலக்கு  கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதோடு அதனை அடையவும் இயலாது என்று அவர் சொன்னார்.

விரிவான முறையில் முடிவெடுப்பதற்கு பதிலாக  உண்மையான ஏழ்மை நிலை குறித்து பொருளாதார திட்டமிடல் பிரிவு  வலியுறுத்துவதை  நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று மக்களவையில் 12 மலேசியத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

பத்தாயிரம் வெள்ளிக்கும் குறைவான தொகையை சேமிப்பில் வைத்திருக்கும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் (இ.பி.எப்.) 46 விழுக்காட்டு உறுப்பினர்களை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சேமநிதி வாரியத்தில் தற்போது உள்ள 10,000 வெள்ளிக்கும் குறைவானத் தொகை நான்கு ஆண்டுகளில் திடீரென உயர்ந்து விடுமா என கேட்க விரும்புகிறேன். இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன் என்றார் அவர்.

கடந்தாண்டு மார்ச் முதல் இவ்வாண்டு ஜூலை வரை 10,317 பேர் திவாலாகியுள்ளதாக பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு குறித்து தமது கவலையை வெளியிட்ட அவர், அதே காலக்கட்டத்தில் பொது முடக்கம் காரணமாக 1,246 நிறுவனங்கள் மூடப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.

 


Pengarang :