ECONOMYMEDIA STATEMENTSELANGOR

அக். 13 ஆம் தேதி நீர் விநியோகத் தடை- பயனீட்டாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்

ஷா ஆலம், அக் 2- இம்மாதம் 13 ஆம் தேதி நீர் விநியோக தடை ஏற்படவிருக்கும் 998 இடங்களுக்கு நீர் விநியோகத்தை ஏற்படுத்தி தருவதற்கு ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் 105 டாங்கர் லோரிகளை தயார் செய்துள்ளது.

நிலைமை சீரடையும் வரை மக்களுக்கு நீர் விநியோகம் தடையின்றி  கிடைப்பதை உறுதி செய்ய 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 18 பொது குழாய்களும் ஏற்பாடு செய்யப்படும் என்று அந்நிறுவனம் கூறியது.

வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்காக லோரிகளில் நீரை நிரப்பும் நான்கு மையங்கள் திறக்கப்படும் என்றும்  நீர் தேவைப்படும் நிறுவனங்கள் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் பயனீட்டாளர் சேவை முகப்பிடத்தில் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி நீரை வாங்கிக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

வாடிக்கையாளர்கள் போதுமான அளவு நீரை முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ள சமயத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அது ஆலோசனை கூறியது.

நீர் விநியோகம் இடம் மற்றும் நீர் அழுத்தம் போன்ற அம்சங்களைப் பொறுத்து அக்டோபர் 16 ஆம் தேதி இரவு 9.00 மணி முதல் வழக்க நிலைக்குத் திரும்பும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நீர் மாசுபாடு சம்பவம் நிகழ்ந்தது முதல் தாமதமடைந்து வரும் நீர் விநியோகத்தை தரம் உயர்த்தும் பணியை மேற்கொள்வதற்காக இந்த நீர் விநியோகத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் விநியோகத் தடையினால் கிள்ளான்/ஷா அலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர், கோல லங்காட் மற்றும் கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படும்.

 

 


Pengarang :