ECONOMYMEDIA STATEMENTSELANGOR

விளையாட்டாளர்களுக்கு வெ. 200,000 செலவில்  உதவித் திட்டங்கள்- சிலாங்கூர் வழங்கியது

காஜாங், அக் 2– ஐம்பது முன்னாள் விளையாட்டாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டாளர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு 195,450 வெள்ளி மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.

தேசிய மற்றும் அனைத்துலக நிலையில் நாட்டை பிரதிநிதித்த அவ்விளையாட்டாளர்களுக்கு தளவாடப் பொருள்கள் மற்றும் வீடுகளைப் பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக விளையாட்டுத் துறைக்கான  ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

இரண்டாவது ஆண்டாக இந்த உதவித் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மாநில மற்றும் தேசிய அளவில் மாநிலத்திற்கு புகழ் சேர்த்த விளையாட்டாளர்களுக்காக இதுவரை 400,000 வெள்ளி வரை செலவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

“விளையாட்டாளர்களின் சேவையைப் போற்றுவோம்“ எனும் கருப்பொருளில் இவ்வாண்டும் இத்திட்டத்தை நாங்கள் தொடர்கிறோம். இம்முறை மாற்றுத் திறனாளி விளையாட்டாளர்களின் நலனில் அக்கறை செலுத்துகிறோம். இவர்களுக்கான உதவி வரும் டிசம்பர் மாதம் வரை கட்டங் கட்டமாக வழங்கப்படும் என்றார் அவர்.

“மகிழ்ச்சியான மாற்றுத் திறனாளி விளையாட்டாளர் சிலாங்கூர் 2021“ எனும் திட்டத்தை சுங்கை சிக்காமாட்டில் உள்ள மாற்றுத் திறனாளி விளையாட்டாளர் ஒருவரின் வீட்டில் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

விளையாட்டாளர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டாளர்களின் நலனைக் காப்பதில் இந்த திட்டம் ஒரு அளவு கோளாக விளங்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :