ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

அடுத்த மாதம் ஆறு மாநிலங்களில் அடை மழை- தயார் நிலையில் தீயணைப்புத் துறை

லபுவான், அக் 11- வடகிழக்கு பருவ மழை காரணமாக ஏற்படக்கூடிய இயற்கை பேரிடரை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள 12,000 தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் ஏற்படக்கூடிய இந்த பருவ நிலை மாற்றத்தால் நாட்டிலுள்ள ஆறு மாநிலங்களில் கடுமையான வெள்ளம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமது ஹம்டான் வாஹிட் கூறினார்.

பேரிடர் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு உதவிகளை விரைந்து வழங்குவதற்கு ஏதுவாக தளவாடங்கள் மற்றும் மனித ஆற்றல் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

ஆண்டு இறுதிக்கான பருவமழை (வடக்கிழக்கு பருவ மழை) அடுத்த  மாதம் தொடங்கும் என்று வானிலை ஆய்வுத் துறை தங்களிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக சபா உள்பட ஆறு மாநிலங்களில் மோசமான வானிலையும் வெள்ளமும் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. நிலைமை மோசமாகும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். அவசியம் ஏற்படும் பட்சத்தில் அண்டை மாநிலங்களின் உதவியும் நாடப்படும் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற சிறப்பாக சேவையாற்றிய பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மோசமான வானிலை காரணமாக கிளந்தான், திரங்கானு, பகாங், ஜொகூர், சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று ஹம்டான் கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் நாடு முழுவதுமிருந்து 115,000 அவசர அழைப்புகளை தீயணைப்புத் துறை பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

சராசரியாக நாளொன்றுக்கு 400 புகார்கள் வரை எங்களுக்கு கிடைக்கின்றன. முந்தைய ஆண்டுகளை விட கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதனை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றார் அவர்.


Pengarang :