ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில்  வேலை வாய்ப்புச் சந்தை அக். 23 ஆம் தேதி தொடங்கும்

ஷா ஆலம், அக் 12- சிலாங்கூர் மாநில அரசின் 2021 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புச் சந்தை இம்மாதம் 23 ஆம் தேதி தொடங்கி வரும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் 25,000 வேலை வாய்ப்புகள் வழங்குப்படுவதாக இளம் தலைமுறையினர்  மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தை  ஹைப்ரிட் எனப்படும் நேரடி நேர்முகத் தேர்வு மற்றும் இயங்கலை என கலவையான முறையில் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

ஷா ஆலம், கோல சிலாங்கூர், கோல குபு பாரு, உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஆகிய பகுதிகளில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் சுமார் 200 நிறுவனங்கள் வரை பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சேவை, தயாரிப்பு, மின்னியல், நிர்வாகம், விண்வெளி ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. வேலை தேடுவோருக்கும் தொழில் துறையினருக்கும் இடையே ஆக்ககரமான சந்திப்பை ஏற்படுத்தும் களமாக இந்த வேலை வாய்ப்புச் சந்தை அமைகிறது. இதுதவிர, தங்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கேற்ப வேலையைப் பெறுவதற்குரிய வாயப்பினையும் வேலை தேடுவோர் பெற இயலும் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில வேலை வாய்ப்புச் சந்தையை இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் இவர் இதனைத் தெரிவித்தார்.

பட்டதாரிகள், வேலையில்லாதோர் மற்றும் வேலை இழந்தோர் www.selangorbekerja.com.my   எனும் அகப்பக்கம் வாயிலாக இந்த வேலை வாய்ப்புச் சந்தைக்கு பதிந்து கொள்ளுபடி கைருடின் கேட்டுக் கொண்டார்.

வேலை தேடுவோருக்காக நடத்தப்படும் நேர்முகப் பேட்டி ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது என்பதோடு  அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதை நிருபிக்க வேண்டும்.

நேர்முகப்பேட்டி நடைபெறும் நாள் மற்றும் இடங்கள் வருமாறு-

  1. டேவான் ஜூப்ளி பேராக், சிலாங்கூர் எஸ்.யு.கே. கட்டிடம் ( 23 அக்டோபர்)
  2. கோல சிலாங்கூர் உள்ளரங்கு (30 அக்டோபர்)
  3. டேவான் மெர்டேக்கா, கோல குபு பாரு (6 நவம்பர்)
  4. டேவான் டிமென்ஸ்னி, உலு லங்காட் (13 நவம்பர் )
  5. டேவான் மெராந்தி, பாயா ஜெராஸ் ( 20 நவம்பர்)
  6. டேவான் ஜூப்ளி பேராக், எஸ்.யு.கே. அலுவலகம், சிலாங்கூர் (27 நவம்பர்)

 


Pengarang :