ECONOMYPBTSELANGOR

நட்புறவுச் சந்தை திட்டத்தின் வழி 2,500 பேர் பயனடைந்தனர்- ரோட்சியா தகவல்

ஷா ஆலம், அக் 13- கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நட்புறவுச் சந்தை திட்டத்தின் வாயிலாக மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளைச் சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

60 வெள்ளி மதிப்பிலான பொருள்களை வெறும் 20 வெள்ளிக்கு வாங்கும் விற்பனை கொள்முதல் அணுகுமுறையை இந்த காய்கறி மற்றும் இறைச்சி விற்பனை சந்தை கொண்டுள்ளதாக நகர்ப்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இரண்டு கோழிகள், 30 முட்டைகள், தலா இரண்டு கிலோ எடை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை 20 வெள்ளி விலையில் விற்பதை இந்த திட்டம் மையமாக கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

உதவித் தொகை சந்தை முறையை அடிப்படையாகக் கொண்ட இந்த திட்டத்தில் பங்கேற்கும் தகுதி உள்ளவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கூட்டு நிர்வாக மன்றம் (ஜே.எம்.பி.) பற்றுச் சீட்டுகளை வழங்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போர், பொருள்களை வாங்கி விநியோகிக்கும் தொழில்முனைவோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினர் ஆகிய மூன்று தரப்பினரை இத்திட்டம் இலக்காக கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வார இறுதி நாட்களில் காலை 8.00 மணி முதல் காலை 11.00 மணி  வரை செயல்படும் இந்த சந்தை ஷா ஆலம், பாங்கி, காஜாங், அம்பாங் ஆகிய பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வெகு விரைவில் மாநிலத்தின் இதரப் பகுதிகளுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :