ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மோரட்டோரியம் காலத்தில் வட்டிக்கு விலக்களிப்பு :பக்கத்தான் வரவேற்பு

ஷா ஆலம், அக் 14- மோரட்டோரியம் எனப்படும் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் காலக்கட்டத்தில் கடனுக்கு வட்டி செலுத்துவதிலிருந்து பி50 எனப்படும்  50 விழுக்காட்டு அடிமட்ட மக்களுக்கு விலக்களிக்கும்படி தாங்கள் விடுத்த கோரிக்கையை பிரதமர் ஏற்றுக் கொண்டதை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வரவேற்றுள்ளது.

அரசாங்கத்திற்கும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 1.7 வது ஷரத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இந்த கோரிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமைத்துவம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 1.7வது ஷரத்தை அரசாங்கம் அமல் செய்தது மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று பக்கத்தான் தலைவர் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக போராடுவது, பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது, மக்களின் உயிரைக் காப்பாற்றி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு  வழி செய்வது ஆகிய அம்சங்களில் நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் பக்கத்தான் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று அவ்வறிக்கை தெரிவித்தது.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக பக்கத்தான் தலைவர்கள் நிதியமைச்சர் துங்கு டத்தோ ஸ்ரீ ஸப்ருள் துங்கு அப்துல் அஜிஸ் மற்றும் வர்த்தக வங்கிகளின் தலைமை செயல்முறை அதிகாரிகளுடன் பல முறை சந்திப்பு நடத்தியதாக அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

இந்த அறிக்கையில் கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர்  முகமது சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அப்கோ கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ வில்ப்ரட் மேடியஸ் தங்காவ் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.


Pengarang :