ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எதிர்க் கட்சியினருடன் கலந்துரையாடல் பட்ஜெட்டின் மதிப்பைக் கூட்டும்- சிஜாங்காங் உறுப்பினர் கருத்து 

ஷா ஆலம், அக் 25- எதிர்க்கட்சியினரும் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தும் நடவடிக்கை 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கத்தை மேலும் மெருகேற்ற உதவும்.

வரவு செலவுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சியினரும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் வாயிலாக மாநில மேம்பாடு மற்றும் மக்களின் நலன் சார்ந்த திட்டங்களின் மதிப்பை கூட்டுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று சிஜாங்காங் உறுப்பினர் டத்தோ டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி கூறினார். 

முந்தைய ஆட்சியாளர்களால் திட்டமிடப்பட்ட கிள்ளான் ஆற்றின் கரையோரப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டம் வரும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தாங்கள் பரிந்துரைத்துள்ளதாக அவர் சொன்னார்.

கிள்ளான் ஆற்றின் கரையோரப் பகுதிகளின் மேம்பாடு குறித்து அடுத்தாண்டு முதல் நாம் பரிசீலிக்க வேண்டும். காரணம் இத்திட்டம் பொருளாதார ரீதியாக மாநில அரசுக்கு நேர் மறையான பலனைக் கொண்டு வரும் என்றார் அவர்.

அதே சமயம், பூர்வக்குடியினரின் கல்வி மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டிலும் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று தாம் பரிந்துரைத்துள்ளாக டாக்டர் அகமது யூனுஸ் கூறினார்.

மேலும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நியாயமான வகையில் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மந்திரி புசார் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கடந்த 15 ஆம் தேதி கலந்துரையாடல் நடத்தினார்.

இந்த நிகழ்வில் டாக்டர் அகமது யூனஸ், குவாங் சட்டமன்ற உறுப்பினர் சலாஹூடின் அமினுடின், தெராத்தாய் உறுப்பினர் லாய் வேய் சோங், எதிர்க்கட்சித் தலைவர் முகமது ஜாய்ம் தவ்பிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :