ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஓய்வு காலத்தில் மூன்று விழுக்காட்டினருக்கு மட்டுமே இ.பி.எஃப். பணம் கை கொடுக்கும்

கோலாலம்பூர், நவ 1- கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான காரணங்களுக்காக கடந்த ஈராண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஊழியர் சேம நிதி வாரியத்திலிருந்து (இ.பி.எஃப்.) பணத்தை மீட்கும் நடவடிக்கை சந்தாதாரர்களின் சேமிப்புத் தொகையில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக, பணி ஓய்வுக்குப் பின்னர் வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான சேமிப்பை வெறும் மூன்று விழுக்காட்டினர் மட்டுமே கொண்டுள்ளனர்.

கோவிட்-19 தொடர்புடைய ஐ-சினார், ஐ-லெஸ்தாரி, ஐ-சித்ரா திட்டங்கள் வாயிலாக பணம் மீட்கப்பட்ட காரணத்தால் 55 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களின் இ.பி.எஃப். சேமிப்பு மிகவும் குறைவாக காணப்படுவதாக அந்த வாரியத்தின் வியூக தலைமை அதிகாரி நோர்ஹிஷாம் ஹூசேன் கூறினார்.

மலேசியர்களில் மூன்று விழுக்காட்டினர் மட்டுமே முறையாக ஓய்வு பெற முடியும் என தாங்கள் நம்புவதாக வெப்பினர் மூலம் நடைபெற்ற பெர்டானா முன்னாள் பட்டதாரிகள் சங்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு இறுதி வாக்கில் 54 வயதுடைய இ.பி.எஃப். சந்தாதாரர்களில் 54 விழுக்காட்டினர் 50,000 வெள்ளிக்கும் குறைவான தொகையை சேமிப்பில் வைத்திருப்பர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

55 வயதை அடையும் போது அனைத்து சேமிப்பு தொகையையும் மீட்பவர்கள் அதனை அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்துவர் என்றும் அவர் கூறினார்.

 


Pengarang :