ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

டிசம்பர் தொடக்கத்தில் கடல் பெருக்கு அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஷா ஆலம், நவ 8- கடந்த வாரம் ஏற்பட்ட கடல் பெருக்கினால் சில கடலோரப் பகுதிகளில் கடல் நீர் கரையைத் தாண்டிய போதிலும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.

கடந்த புதன் கிழமை தொடங்கிய இந்த கடல் பெருக்கினால் கடலில் நீர் மட்டம் 5.6 மீட்டர் வரை உயர்ந்ததாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர்  ஹபிஷாம் முகமது நோர் கூறினார்.

இந்த இயற்கை சீற்றம்  காரணமாக சில வீடமைப்பு பகுதிகளில் நீர் புகுந்த போதிலும் சிறிது நேரத்தில் நீர் வற்றத் தொடங்கியது என அவர் குறிப்பிட்டார். இதனால் தற்காலிக துயர் துடைப்பு மையம் எதுவும் திறக்கப்படவில்லை என்றார் அவர்.

அலைகள் ஏழு மீட்டர் வரை உயர்ந்தால் அல்லது தடுப்பணைகள் உடைந்தால் மோசமான வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதை கடந்த கால அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆகவே, அனைத்து அரசாங்கத் துறைகளுடனும் இணைந்து நிலைமையை நாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருகிறோம் என்று அவர் சொன்னார்.

வரும் டிசம்பர் மாதம் இதே போன்ற கடல் பெருக்கு சம்பவம் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்  அப்போது ஆறு மீட்டர் உயரம் வரை அலைகள் உயரும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே, கடலோரங்களில் வசிப்போர் இவ்விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :