ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நிச்சயமற்ற பொருளாதார சூழலுக்கு மத்தியிலும் வெ.220 கோடி வரியை வசூலிக்க சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், நவ 8– நீண்ட காலமாக அமலில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும் இவ்வாண்டில் 220 கோடி வெள்ளியை வரியாக வசூலிக்க சிலாங்கூர் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

நேற்று வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 95 விழுக்காட்டுத் தொகை இதுவரை வசூலிக்கப்பட்ட வேளையில் எஞ்சிய தொகையை இவ்வாண்டு இறுதிக்குள் வசூலிக்க முடியும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்தார்.

கடந்தாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குபடி 223 கோடி வெள்ளி வரியை வசூல் செய்தோம். இவ்வாண்டில் அந்த இலக்கை எட்ட முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் 210 கோடி வெள்ளியாவது வசூலித்து விடுவோம் என்றார் அவர்.

இவ்வாண்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை நீண்டதாக இருந்த போதிலும் நாம் இதுவரை 200 கோடி வெள்ளியை வசூலித்து விட்டோம். ஆகவே, எஞ்சிய காலத்திற்குள் இலக்கை அடைந்து விட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இங்குள்ள ஜூப்னி பேராக் மண்டபத்தில் இன்று நடைபெற்ற அரசு ஊழியர்களின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வுக்கு பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த வரி வசூலிப்பின் மூலம் மக்கள் நலத் திட்டங்களை குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து  மீள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களுக்கான சிறப்பு நிதியுதவி குறித்து வினவப்பட்ட போது , இம்மாதம் 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அது குறித்து அறிவிக்கப்படும் என்று அமிருடின் சொன்னார்.


Pengarang :