ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சட்டவிரோத தொழிற்சாலையிலிருந்து வெ. 300,000 மதிப்புள்ள அலுமினிய கட்டிகள் பறிமுதல்

ஷா ஆலம்,  நவ 16- முறையான உரிமம் இன்றி செயல்பட்டு வந்த தொழிற்சாலைக்கு எதிராக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அச்சோதனையின் போது செரெண்டா, சுங்கை சோ பகுதியில் இயங்கி வந்த அந்த தொழிற்சாலையிலிருந்து 300,000 வெள்ளி மதிப்பிலான 56  அலுமினியகட்டிகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இந்த அதிரடி சோதனை நடவடிக்கை இம்மாதம் 9ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டதாக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது கூறினார்.

இந்நடவடிக்கையின் போது அந்த தொழிற்சாலையில் இருந்த இரு சீன நாட்டு பிரஜைகள் செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாத காரணத்திற்காக தடுத்து வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த தொழிற்சாலைக்கு அமலாக்க அதிகாரிகள் சென்ற போது அதன் வாயிற்கதவுகள் பூட்டப்படாமலிருந்தது. அங்கு இரு பராமரிப்பாளர்கள் இருந்ததோடு ஐந்து போர்க்லிப்ட் இயந்திரங்களும் 56 ஈயக்கட்டிகளும் இருந்தன என்றார் அவர்.

உலு சிலாங்கூ நகராண்மைக் கழகம் மேற்கொண்ட மிகப்பெரிய பறிமுதல் நடவடிக்கை இதுவாகும் எனக் கூறிய அவர், அந்த தொழிற்சாலையின் தோற்றத்தைப் பார்க்கையில் அது தொடர்ந்து இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது என்றார்.

2007 ஆம் ஆண்டு வர்த்தக மற்றும் தொழிலியல் துணைச் சட்டத்தின் 3 மற்றும் 38வது பிரிவின் கீழ் அத்தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :