Projek perumahan
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

விவேக வாடகைத் திட்ட வீடுகளின் கையிருப்பை அதிகரிக்க சிலாங்கூர் அரசு திட்டம்

ஷா ஆலம், நவ 16- நடப்புத் தேவையை ஈடு செய்ய அடுத்தாண்டில் விவேக வாடகைத் திட்டத்திற்கான 100 வீடுகளின் கொள்முதல் கையிருப்பை அதிகரிக்கும் சாத்தியத்தை மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம்,  மாநில அரசின் தொடக்க மேம்பாட்டு மூலதனத்தின் வாயிலாக நிர்மாணிக்கப்பட்ட 1,111 வீடுகளை உள்ளடக்கியுள்ளதாக வீடமைப்பு மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

அவற்றில்  முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட 649 வீடுகள்  வாடகைக்கு விடுவதற்கு தயாராக உள்ள நிலையில் எஞ்சிய 110 வீடுகளை வாடகைக்கு விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர 40 வீடுகள் கட்டுமானத்தில் உள்ள வேளையில் கடந்தாண்டிலும் இவ்வாண்டிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 312 ஆகும் என்றார் அவர்.

இதுவரை 920 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள வேளையில் 530 வீடுகள் பொது மக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. காலியாக இருக்கும் மற்ற வீடுகளை வாடகைக் விடுவது தொடர்பில் நேர்காணல் நடத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

விவேக வாடகைத் திட்டத்தின் கீழ் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள 2 கோடி வெள்ளி ஒதுக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.


Pengarang :