ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாடு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது

கோலாலம்பூர், நவ 18- இன்று தொடங்கிய  2021 ஆம் ஆண்டு சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு (சிப்ஸ்) மலேசிய சாதனைப் புத்தகத்தில்  இடம் பிடித்துள்ளது.

மிகப்பெரிய கண்காட்சி நிகழ்வுக்காக அந்த மலேசிய சாதனைப் பட்டியலில் இந்த மாநாடு இடம் பிடித்துள்ளதாக முதலீடு மற்றும் தொழிலியல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

மொத்தம் 13,000 சதுர மீட்டர் பரப்பளவில் 500 காட்சிக் கூடங்களை கொண்டுள்ள இந்த வர்த்தக கண்காட்சிக்கு பத்தாயிரம் பேர் வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

இவ்வாண்டில் சிப்ஸ் மாநாடு விரிவான அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  13,000 சதுர மீட்டர் பரப்பளவு இடத்தில் 500 காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியைப் பார்வையிட பத்தாயிரம் பேர் வரை வருகை புரிவர் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

இங்குள்ள கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் சிப்ஸ் 2021 உச்ச நிலை மாநாட்டின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத தெரிவித்தார்.

 சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சியாக தொடங்கிய இந்த சிப்ஸ் மாநாடு  தற்போது நான்கு நாட்கள் நடைபெறக் கூடிய உச்சநிலை மாநாடாக விரிவடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது உச்சநிலை மாநாட்டில் 33 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் வருகையாளர்கள் கலந்து கொண்டதோடு 110 கோடி வெள்ளி மதிப்பிலான வர்த்தக வாய்ப்பையும் பதிவு செய்ததாக அவர் சொன்னார்.


Pengarang :