ECONOMYPBTSELANGOR

இலக்கவியல் திட்டத்தை சிலாங்கூர் துரிதப்படுத்தும்- மந்திரி புசார்

கோலாலம்பூர், நவ 19- கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் இலக்கவியல் திட்டத்தை விரைவுபடுத்துவதில் சிலாங்கூர் அரசு கவனம் செலுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

2025 ஸ்மார்ட் சிலாங்கூர் தொலைநோக்குத் திட்டம் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலுக்கு முன்னரே தொடங்கப்பட்டு விட்டது. இது, மக்கள், வர்த்தகத் துறை மற்றும் பொதுச் சேவைத் துறையை ஆக்கத் திறன் கொண்டதாக இருக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

உலகம் முழுவதும் இலக்கவியல் திட்ட அமலாக்கத்தை பெருந்தொற்று பரவல் விரைவுபடுத்தி விட்டது. சிலாங்கூர் அரசுகூட பொருளாதார மற்றும் இலக்கவியல் சூழியல் முறையின் உருவாக்கத்தை துரிதப்படுத்தி வருகிறது என்றார் அவர்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் 2021 சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலக்கட்டத்திற்கான சமூக மற்றும் பொருளாதார வடிவமைப்பில் ஆக்கத்திறனை வலுப்படுத்துவது அவசியமான ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலக்கவியல் அலைவரிசையில் சிலாங்கூர் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கும் உயர் தொழில்நுட்பமும் மதிப்பு கூட்டு அனுகூலமும் கொண்ட துறைகளில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் இந்நடவடிக்கை அவசியமாகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் சார்பில் ராஜா மூடா துங்கு அமீர் ஷா அதிகாரப்பூர்மாக தொடக்கி வைத்தார்.

“சிலாங்கூர் ஆசியானின் நுழைவாயில்“ எனும் கருப்பொருளிலான இந்த மாநாட்டு இம்மாதம் 18 முதல் 21 வரை ஹைப்ரிட் எனப்படும் பேராளர்களின் நேரடி பங்கேற்பு மற்றும் இயங்கலை வாயிலாக நடைபெறுகிறது .

 


Pengarang :