ECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

தொழிலாளர் குடியிருப்பு திட்டம் – பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வரவேற்பு

ஷா ஆலம், டிச 2- சிலாங்கூரில் தொழிலாளர்களுக்கான குடியிருப்புத் தொகுதியை உருவாக்கும் மாநில அரசின் திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகளுக்கு அருகில் வசிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகம் பரவும் அபாயம் உள்ள அந்நியத் தொழிலாளர் தங்கும் விடுதிகளுக்கு அருகில் உள்ளவர்கள் மத்தியில் காணப்படும் அச்சத்தை இந்நடவடிக்கை போக்கும் என்று பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சீயு கீ கூறினார்.

மலாய் மொழி தெரியாத காரணத்தால் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை அந்நியத் தொழிலாளர்கள் மீறும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக அவர் சொன்னார்.

ஆகவே, தொழிலாளர் குடியிருப்பு தொகுதிகளை உருவாக்கும் மாநில அரசின் திட்டத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன் என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

அந்த குடியிருப்பு தொகுதிகள் முறையாகவும் கவனமுடனும் நிர்வகிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனக் கூறிய அவர், அதனை நிர்வகிக்கும் பணி உள்நாட்டினருக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.

அத்தகைய குடியிருப்பு தொகுதிகளை நிர்வகிக்கும் பொறுப்பை அந்நிய நாட்டினரிடம் ஒப்படைத்தால் அது நமது கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் என்று அவர் எச்சரித்தார்.

தொழிலாளர் குடியிருப்புத் தொகுதியை உருவாக்க 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக கடந்த வாரம் மாநில சட்டமன்றத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.


Pengarang :