MEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

2022 வரவு செலவுத் திட்டத்தில்  இந்திய சமூகம் புறக்கணிக்கப்படவில்லை- கணபதிராவ்

ஷா ஆலம், டிச 3- சிலாங்கூர் அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இந்திய சமூகத்தின் மீதும் உரிய கவனத்தை செலுத்தியுள்ளதாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

கடந்த வாரம் மாநில சட்டமன்றத்தில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தாக்கல் செய்த இந்த வரவு செலவுத் திட்டத்தில் 1 கோடியே 20 லட்சம் வெள்ளி இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக  அவர் சொன்னார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 லட்சம்  வெள்ளியும் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினரின் மேம்பாட்டிற்கு 20 லட்சம் வெள்ளியும் கலாசார நிகழ்வுகளுக்கு 5 லட்சம் வெள்ளியும் ஐ.சீட் எனப்படும் இந்திய வர்த்தகர்களுக்கான உதவித் திட்டத்திற்கு 11 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

இது தவிர, இந்து ஆலயங்களின் மேம்பாட்டிற்கு 18 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாக நேற்று இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இந்திய சமூகம் உள்பட அனைத்து இன மக்களும் பயன்பெறும் ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டம், மூத்த குடிமக்கள் உதவித் திட்டம், இலவச இணைய தரவு சலுகைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் உள்ளடங்கவில்லை என்று அவர் சொன்னார்.

மாநில மக்கள், வர்த்தக சமூகம் மற்றும் பொருளாதாரதை மேம்படுத்துவதை இலக்காக கொண்ட 234 கோடி வெள்ளி வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் கடந்த மாதம் 26 ஆம் தேதி தாக்கல் செய்தார்.


Pengarang :