ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

  சிலாங்கூர் அனைத்துலக சுற்றுலா மாநாடு 2021 இன்று தொடங்கியது

பெட்டாலிங் ஜெயா, டிச 10- டூரிசம் சிலாங்கூர் ஏற்பாட்டிலான சிலாங்கூர் அனைத்துலக சுற்றுலா மாநாடு 2021 இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.

சுற்றுலாத் துறைக்கு அனைத்துலக நிலையில் புத்துயிரூட்டும் நோக்கிலான இந்த மாநாட்டை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷா அதிகாரப்பூர்மாக இன்று காலை தொடக்கி வைத்தார்.

இந்த மாநாடு பெட்டாலிங் ஜெயா நியு வோர்ல்ட் தங்கும் விடுதியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

ஹைப்ரிட் முறையில் அதாவது பேராளர்களின் நேரடி பங்கேற்பு மற்றும் இயங்கலை வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க தினமான இன்று 300 பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றிய மந்திரி புசார், கோவிட்-19 நோய்த் தொற்றினால் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு நிச்சயமற்ற எதிர்காலத்தையும் எதிர்நோக்கியுள்ளதாகச் சொன்னார்.

தொற்று நோய்ப் பரவலுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டுவது கடினமானப் பணியாக இருந்த போதிலும் அது அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்குப் பிறகு “இலக்கவியல் சுற்றுலா 4.0 மற்றும் மின்-வர்த்தகம்“,“ வர்த்தக சுற்றுலாவுக்கு உயிரூட்டுவதில் பல்வகைத் தன்மை மற்றும் புத்தாக்கம்“ என இரு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெறும்.


Pengarang :