ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

சுற்றுலாத் துறையின் மீட்சிக்கு வெ. 11.46 கோடி ஒதுக்கீடு – மந்திரி புசார்

பெட்டாலிங் ஜெயா, டிச 10- சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையை மீட்சியுறச் செய்வதற்கு மாநில அரசு 11 கோடியே 46 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

சுற்றுலா சார்ந்த அனைத்துத் துறைகளையும் உட்படுத்திய திட்டங்களை 2021 முதல் 2025 வரை மேற்கொள்வதற்கு இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுற்றுலாத் துறையின் மீட்சிக்காக அத்துறையில் உள்ளவர்களுக்கு மானியம் வழங்குவது, சிலாங்கூரை முதலில் வலம் வருவோம் மற்றும் சிலாங்கூர் இண்டா திட்டங்களை அமல் செய்வது, எஸ்.ஒ.பி. விதிமுறைகளை வகுப்பது, 2022 சிலாங்கூர் சுற்றுலா மாநாட்டை நடத்துவது மற்றும் சுற்றுலா தொடர்புடைய அடிப்படை வசதிகளை தரம் உயர்த்துவது ஆகிய நோக்கங்களுக்கான செலவினத்தை இந்த ஒதுக்கீடு உள்ளடக்கியுள்ளது என அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் எப்போதும் ஒரு அடி முன்னோக்கியே இருக்க விரும்புவதோடு ஒட்டுமொத்த நாட்டின் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கான உந்து சக்தியாகவும் விளங்கவும் ஆர்வம் கொண்டுள்ளது என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் சவால்மிகுந்த ஈராண்டுகளைக் கடந்தப் பின்னர் அத்துறைக்கு எழுச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மீட்சித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்குள்ள நியு வோர்ல்ட் தங்கும் விடுதியில் சிலாங்கூர் அனைத்துலக சுற்றுலா மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :