ECONOMYNATIONALPBTPENDIDIKAN

சிலாங்கூர் புத்தக விழா- எட்டு நாட்களில் 14,000 பேர் வருகை

ஷா ஆலம், டிச 11- சிலாங்கூர் புத்தக விழா 2021 தொடங்கிய எட்டு நாட்களில் 14,000 வருகையாளர்கள் அவ்விழாவுக்கு வருகை புரிந்துள்ளனர்.

இத்தகைய விழாக்களுக்கு மாணவர்கள் குழுவாக வருகை புரிவது இம்முறை தடைபட்டு போனாலும் இதுவரை பதிவாகியுள்ள எண்ணிக்கை பிரமிப்பூட்டும் வகையில் உள்ளதாக புத்தக விழாவின் இயக்குநர் முகமது ஃபாட்சில் முகமது பவுசி கூறினார்.

ஒவ்வொரு நாளும் 2,000 முதல் 3,000 பேர் இந்த புத்தக விழாவுக்கு வருகை புரிகின்றனர். 30 வெள்ளிக்கும் மேல் புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் அதிர்ஷடக் குலுக்கல் வாய்ப்பின் வழி இந்த எண்ணிக்கை பெறப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இங்கு வருவோர் வெறுமனே பொழுதைப் போக்குவதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக, புத்தகம் வாங்குவது மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் புத்தகத் தொழில் துறைக்கு ஆதரவளிப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் அவர்கள் இங்கு வருகின்றனர் என்றார் அவர்.

கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்களே இங்கு அதிகம் விற்பனையாவதாக கூறிய அவர்,  அதற்கு அடுத்த நிலையில் நாவல்கள் மற்றும் கேலிச்சித்திர புத்தகங்கள் விற்னையாகின்றன என்றார்.

பள்ளிகளில் கல்வித் தவணை நீட்டிக்கப்பட்ட போதிலும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்க பாட புத்தகங்களை வாங்குவதற்காக இங்கு வருவதை காண முடிகிறது என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :