ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

அனைத்து துறைகளுக்கும் அந்நியத் தொழிலாளர்களை தருவிக்க அனுமதி

புத்ராஜெயா, டிச.11 - தோட்டத் துறையைத் தவிர அனைத்துத் துறைகளுக்கும்  தொழிலாளர்களை  வங்கதேசத்திலிருந்து தருவிப்பது தொடர்பாக மலேசியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு நேற்று  நடைபெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

 முதலாளிகளுக்கு சுமை ஏற்படாத வகையில் பல அடுக்கு வரி விதிப்பை அடுத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை ஒத்திவைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் கூறினார்.

 அமைச்சரவை இந்த  ஒப்புதலை அளித்ததன் அடிப்படையில், தோட்டம், விவசாயம், உற்பத்தி, சேவைகள், சுரங்கம் மற்றும் குவாரி, கட்டுமானம் மற்றும் உள்நாட்டு சேவை போன்ற அனுமதிக்கப்பட்ட துறைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களைத் தருவிக்க அனுமதிக்கப்படும் என்று சரவணன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய அந்நியத் தொழிலாளர் தருவிப்பு மற்றும் கோவிட் -19 பரவல் தடுப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு  வெளிநாட்டினரின் நுழைவு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறையை   மேம்படுத்துவதில் சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் மனிதவள அமைச்சு ஒத்துழைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்

பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நோய்த் தொற்று உள்ளவர்களைத் தனிமைப் படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

மலேசியாவில் பணிபுரிய வங்காளதேசத்தினரை தருவிப்பது  தொடர்பாக வங்கதேசத்தின் புலம்பெயர்ந்தோர் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் இம்ரான் அகமதுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக  சரவணன் குறிப்பிட்டார்.

அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தான பிறகு அத்தொழிலாளர்களின் நுழைவு அனுமதிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Pengarang :