ECONOMYMEDIA STATEMENTNATIONAL

23 லட்சம் சாலைக் குற்றப்பதிவுகளுக்கு 10.9 கோடி வெள்ளி அபராதம் வசூல்

ஷா ஆலம், டிச 13- கடந்த வியாழக்கிழமை தொடங்கி மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகை கழிவு திட்டத்தின் வாயிலாக நான்கு நாட்களில் 10 கோடியே 90 லட்சம் வெள்ளி அபராதத் தொகையை காவல் துறையினர் வசூலித்துள்ளனர்.

அந்த அபராதத் தொகை 23 லட்சம் போக்குவரத்து குற்றப்பதிவுகளை உள்படுத்தியவையாகும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

அபராதம் செலுத்தும் முகப்பிடங்களிலும் இயங்கலை வாயிலாக அபராதம் செலுத்தும் முறையிலும் நெரிசல் காணப்படுவதை தாங்கள் உணர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.

இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்ட போலீஸ் தலைமையகங்களிலும் அபராதம் செலுத்துவதற்கான கூடுதல் முகப்பிடங்களை ஏற்பாடு செய்யும்படி சாலைப் போக்குவரத்து விசாரணைத் துறை இயக்குநரை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன் வழி பொதுமக்கள் நெரிசலில் சிக்குவதைத் தவிர்த்து இலகுவான முறையில் அபராதத் தொகையை செலுத்துவதை உறுதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :