ECONOMYPBTSELANGOR

பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தற்காலிக லைசென்ஸ் திட்டம் தொடரும்

கோல சிலாங்கூர் டிச 17- சிறு வணிகர்களுக்கு தற்காலிக வர்த்தக லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை சிலாங்கூர் அரசு அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கவுள்ளது.

இம்மாதத்துடன் முடிவுக்கு வரவேண்டிய இத்திட்டம் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட வணிகர்களின் நலன் கருதி மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

மாநில அரசின் இந்த முடிவு வணிகர்களுக்கு ஓரளவு மன நிம்மதியை அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள பெஸ்தாரி ஜெயாவில் உணவு விற்பனை கூடத்தை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைச் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக அன்றாட வாழ்க்கையை நடத்துவதில் சிறு வணிகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனையை மாநில அரசு உணர்ந்துள்ளதை இந்நடவடிக்கை புலப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் 200,000 சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் உள்ளனர். அவர்களுக்கு அரசு உதவாவிட்டால் சமூக பொருளாதார ரீதியில் சமுதாயம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் என்றார் அவர்.

இதன் அடிப்படையில், பொது இடங்களில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் வர்த்தகம் புரிய சிறு மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியது என அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிறு அளவில் வர்த்தகம் புரிவதற்கு ஏதுவாக கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 8,386 வணிக உரிமங்களை மாநில அரசு வழங்கியுள்ளதாக இங் ஸீ ஹான் கடந்த ஜூலை மாதம் 3 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :