ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

மீட்பு பணி தாமதம்: அடர்த்தியான மக்கள் தொகையே காரணம்- ஐ.ஜி.பி.

ஷா ஆலம், டிச 23 -  வெள்ளம் பாதித்த பகுதிகளில் காணப்படும் குடியேற்ற முறை மற்றும் அடர்த்தியான மக்கள் தொகை  ஆகியவை தாமான் ஸ்ரீ மூடாவில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாகும்  தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார்.

குடியேற்றத்தின் முறை மற்றும் மக்கள் தொகை அடர்த்தியின் காரணமாக கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளைக் காட்டிலும் இப்பகுதி முற்றிலும் வேறுபட்டது என்று அவர் சொன்னார்

கிளந்தான், பகாங் மற்றும் திரெங்கானுவுடன் ஒப்பிடும்போது ​​இங்கு மக்கள் அடர்த்தியான  சூழலில் வரிசை வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.

இடம், குடியேற்ற முறை மற்றும் குறைந்த மக்கள் தொகை  காரணமாக கிழக்கு கடற்கரை மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக வெளியேற்ற முடிகிறது. ஆனால் இங்கு மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இதுவே எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றார் அவர். 

இன்று இங்கு நடைபெற்ற வெள்ள நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

இருந்த போதிலும், போலீஸ் உட்பட அனைத்து மீட்பு நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு விரைவாக மேம்படுத்தப்பட்டு தாமான் ஸ்ரீ மூடாவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அதிக வளங்களும் தளவாடங்களும் ஒன்று திரட்டப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளம் பாதித்த சிலாங்கூர், கோலாலம்பூர், பகாங், பேராக், மலாக்கா, கிளந்தான் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய ஏழு மாநிலங்களுக்கு பல்வேறு துறைகளிலிருந்து  மொத்தம் 66,015 பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

இதனிடையே,  வெள்ள அகதிகள் வெள்ள சேதம் மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள்ன தொடர்பில் புகார் செய்வதற்கு ஏதுவாக தற்காலிக நிவாரண மையங்களில் போலீஸ்கார்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Pengarang :