ECONOMYPBTPENDIDIKANSELANGOR

கோவிட்-19: நாட்டில் நேற்று 3,528 பேர் பாதிப்பு

கோலாலம்பூர், டிச 25– நாட்டில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நான்காயிரத்திற்கும் குறைவான  கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று  3,528 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதாக  சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

ஆகக்கடைசியாக நாட்டில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதியன்று  4,083 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் சொன்னார். நேற்றைய சம்பவங்களுடன்சேர்த்து நாட்டில்  கோவிட் -19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 35 ஆயிரத்து 241 ஆக அதிகரித்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று பதிவான சம்பவங்களில்  3,425 உள்ளூரில் பரவியவையாகும். மீதமுள்ள 103 சம்பவங்கள் இறக்குமதியானவையாகும். நேற்றைய சம்பவங்களில் 3,462 அல்லது 98.1  சதவிகிதம் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட பாதிப்பைக் கொண்டவையாகும். எஞ்சிய  66 சம்பவங்கள் அல்லது 1.9 சதவிகிதம்  மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பைக் கொண்டுள்ளன என்று அவர்  கோவிட் -19 நிலவரங்கள்  குறித்த அறிக்கையில் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று மொத்தம் 4,489 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 57 ஆயிரத்து 074 ஆக உயர்ந்துள்ளது. 261 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட வேளையில்  117 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.


Pengarang :