ECONOMYNATIONALPBTSELANGOR

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி அடுத்த வாரம் முற்றுப் பெறும்

ஷா ஆலம், ஜன 3- சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை அகற்றும் பணி அடுத்த வாரம் முற்றுப் பெறும் என்று கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் கூறுகிறது.

எட்டு பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி தற்போது 85 விழுக்காடு வரை முழுமையடைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

சிப்பாங் மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் துப்புரவுப் பணி முழுமை பெற்றுள்ள நிலையில் கிள்ளான், காஜாங், கோல சிலாங்கூர், கோல லங்காட், சுபாங் ஜெயா ஆகிய பகுதிகளில் வரும் வியாழக்கிழமைக்குள் இப்பணி நிறைவடையும் என அவர் சொன்னார்.

அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான  ஸ்ரீ மூடாவில் 60 விழுக்காடு குப்பைகள் அகற்றப்பட்டுள்ள வேளையில் அப்பகுதியை சுத்தம் செய்யும் பணி மூன்று நாட்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் அவர் மேலும் தெரிவித்தார்.

தாமான் ஸ்ரீ மூடா பெரிய பகுதியாக உள்ளது. 9,700 வீடுகள் 25 தாமான்கள் மற்றும் 179 தொழிற்சாலைகளை அது உள்ளடக்கியுள்ளதால் அங்கு துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அங்குள்ள பொதுமக்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

கடந்த 11 நாட்களாக அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவுப் பணியின் போது 33,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :