ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ள எச்சரிக்கை முறையை மேம்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சுக்கு உத்தரவு

கோலாலம்பூர், ஜன 5வெள்ள எச்சரிக்கை முறையை மேம்படுத்தும்படி சுற்றுச் சூழல் மற்றும் நீர்வள அமைச்சு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 எச்சரிக்கை ஒலி மிகுதியாகவும்  மற்ற சைரன்களில் ஒலிகளிலிருந்து  மாறுபட்டதாகவும் இருப்பதை உறுதி செய்யுமாறு சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சு (காசா) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியது.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையில் நேற்று நடைபெற்ற வடகிழக்கு பருவமழைக்கு பிந்தைய வெள்ளப் பேரிடர் மேலாண்மை பணிக்குழு (எம்டிஎல்) சிறப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகும் என்று அறிக்கை ஒன்றில் அது கூறியது. 

பேரிடருக்குப் பிந்தைய தடுப்பு நடவடிக்கைளில், பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சினையைச் சமாளிக்க முறையாகப் பராமரிக்கப்படாத தடுப்பணைகளைக் கண்காணிப்பதற்கான  நடவடிக்கை  அந்த அமைச்சு மேற்கொள்வதும் அடங்கும் என்று அது தெரிவித்தது. 

பேரிடருக்கு பிந்தைய கட்டத்தில் நுழைந்த மாநிலங்களில் ஏற்பட்ட இழப்புகளை மதிப்பீடு செய்ய மாவட்ட வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறையுடன் (ஜேபிஎஸ்) கலந்துரையாடலை நடத்துமாறு மாநில மற்றும் மாவட்ட பேரிடர் அதிகார மையங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பந்துவான் வாங்  இசான் எனப்படும் பேரிடர் உதவி நிதி  விநியோக செயல்முறையை எளிமையாக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும், பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக மாவட்ட அலுவலகங்கள் உதவித் தொகை பகிர்ந்தளிப்பு முறையை எளிதாக்குவதை அனைத்து மந்திரி புசார்கள் அல்லது முதலமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

 நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, பகாங், ஜோகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவில் உள்ள நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, அதே சமயம் திரெங்கானு, சபா மற்றும் சிலாங்கூர் ஆகிய இடங்களில் எந்த மாற்றமும் இல்லை.


Pengarang :