ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

அஸாம் பாக்கியை சுயேச்சை அமைப்பு விசாரிக்க அனுமதிப்பீர்- எம்.ஏ.சி.சி.க்கு அன்வார் கோரிக்கை

ஷா ஆலம், ஜன 12- ஊழல் தடுப்பூ ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கி நிறுவனப் பங்குகளை வைத்திருந்தது தொடர்பில் சுயேச்சை அமைப்பு விசாரணை மேற்கொள்ள ஊழல் தடுப்பு ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

அந்த ஆணையத்தின் உயர்மட்டத் தலைவர் சம்பந்தப்பட்ட விவகாரமாக இது உள்ளதால் சுயேச்சை அமைப்பினால் இது விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

சுயேச்சை அமைப்பு விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக எம்.ஏ.சி.சி. இவ்விவகாரத்திலிருந்து தற்காலிகமாக விலகியிருக்க வேண்டும். அதே துறை விசாரணையை மேற்கொண்டால் அந்த விசாரணை சுயேச்சையானதாக இருக்காது. யாரையும் தண்டிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறேன். ஆயினும் அது நடப்பதாக தெரியவில்லை என்றார் அவர்.

எம்.ஏ,சி.சி.யை பங்குச் சந்தை ஆணையம் விசாரிக்கும் பட்சத்தில் அவர்கள் விதிமீறல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்வர் என்று  பேஸ்புக் வாயிலாக ஒளிபரப்பான நேரலையில் அவர் தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் எம்.ஏ.சி.சி.யின் விசாரணைப் பிரிவு இயக்குநராக இருந்த போது இரு நிறுவனங்களின் 20 லட்சம் பங்குகளை அஸாம் பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

பொது சந்தையில் பங்குகளை வாங்க தன் சகோதரர் தனது பங்கு சந்தைக் கணக்கைப் பயன்படுத்தியதாக அஸாம் பாக்கி கடந்த 5 ஆம் தேதி விளக்கமளித்திருந்தார்.


Pengarang :