ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் அரசின் வெள்ள உதவி நிதியை 31,585 பேர் பெற்றனர்

ஷா ஆலம், ஜன 13- சிலாங்கூர் மாநில அரசின் 1,000 வெள்ளி வெள்ள உதவி நிதியை இன்று காலை 10.00 மணி வரை 31,585 பேர் பெற்றுள்ளனர். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவதற்காக பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் இதுவரை 3 கோடியே 17 லட்சத்து 5 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர வெள்ளத்தில் உயிரிழந்த சிப்பாங், கிள்ளான், உலு லங்காட், மற்றும் கோல லங்காட்டைச் சேர்ந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளி நிவாரண நிதி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 9,837 பேரும் கிள்ளானில் 7,376 பேரும் உலு லங்காட்டில் 6,457 பேரும் இந்நிதியைப் பெற்றுள்ளனர். 

மேலும், சிப்பாங்கில் 3,600 பேருக்கும் கோல லங்காட்டில் 1,890 பேருக்கும்  கோல சிலாங்கூரில் 1,548 பேருக்கும் கேம்பாக்கில் 750 பேருக்கும் உலு சிலாங்கூரில் 92 பேருக்கும் சபாக் பெர்ணமில் 35 பேருக்கும் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டதாக அமிருடின் தெரிவித்தார்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் வெள்ளத்தில் சேதமடைந்த அடிப்படை வசதிகளை சரி செய்வதற்காகவும் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியை ஒதுக்கீடு செய்தது.

இந்த பந்துவான் சிலாங்கூ பங்கிட் திட்டத்தின் வாயிலாக வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளியும் உடைமைகளை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது.


Pengarang :