ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தைப்பூசத்தில் எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக கடைபிடிப்பீர்- கணபதிராவ் வேண்டுகோள்

ஷா ஆலம், ஜன 17– அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் சீரான செயலாக்க நெறிமுறைகளை (எஸ்.ஒ.பி.) முறையாக கடைபிடிக்கும்படி தைப்பூசத்தைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த விழாவின் போது பொதுமக்களுக்கு குறிப்பாக சிறார்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பரவாமலிருப்பதை உறுதி செய்ய இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாவதாக மாநில இந்து சமய விவகார சிறப்புகு குழுத் தலைவர் வீ. கணபதிராவ் கூறினார்.

தைப்பூச விழாவை முன்னிட்டு கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் பக்தர்கள் இறைவனை வழிபடுவதற்கும் நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்கும் எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.

ஆகவே, பக்தர்கள் உளத் தூய்மையை பேணி காக்கும் அதேவேளையில் நல்ல நோக்கத்துடன் அரசாங்கம் நிர்ணயித்துள்ள விதிகளுக்கு எதிர்ப்பு காட்டாமல் அதனை ஏற்று ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இவ்வாண்டு தைப்பூசத்தில் காவடி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் இரத ஊர்வலம் மற்றும் பால் குட ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சடிக் அண்மையில் அறிவித்திருந்தார்.


Pengarang :