ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 2,058 பேர் வெள்ள நிவாரண நிதியைப் பெற்றனர்

ஷா ஆலம், ஜன 23- கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புக்கிட் மெலாவத்தி தொகுதியைச் சேர்ந்த 2,058 பேர் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றனர்.

நிதியதவி பெற்ற அனைவரும் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்களாவர் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

தற்காலிக நிவாரண மையங்களுக்குச் செல்லாதவர்களின் மனுக்கள் தற்போது பரிசீலனையில் உள்ளது. ஒரே வீட்டிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதால் அவற்றை நன்கு ஆராய வேண்டியுள்ளது என அவர் சொன்னார்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இங்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரச பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 10 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் வழங்கப்படும்.

நேற்று முன்தினம் வரை இத்திட்டத்தின் கீழ் 40,917 பேர் பயன்பெற்றுள்ளனர். இந்நோக்கத்திற்காக மாநில அரசு இதுவரை 4 கோடியே 10 லட்சத்து 37 ஆயிரம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.


Pengarang :