ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

பொது முடக்கம், நடமாட்டக் கட்டுப்பாடு இனி கிடையாது- அரசாங்கம் உத்தவாதம்

பெரா, ஜன 23- வரும் நோன்புப் பெருநாளின் போது அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தாது என்பதோடு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உறுதியளித்துள்ளார்.

சமூக, பொருளாதார நடவடிக்கைகளுக்கும் எல்லை கடப்பதற்கும் வழக்கம் போல் அனுமதி வழங்கப்படும் என்று அவர் கூறினார். 

ஏதாவது ஒரு இடத்தில் நோய்த் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அப்பகுதியில் மட்டும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் என அவர் சொன்னார்.

கோவிட்-19 சம்பவங்கள் அண்மைய சில தினங்களாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நோன்புப் பெருநாளின் போது சொந்த ஊர்களுக்குச் செல்ல தடை விதிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு ஆருடங்களை ஒரு சிலர் பரப்பி வருகின்றனர். இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் வாக்குறுதியளித்தபடி நாடு முழுவதும் அல்லது மாநில, மாவட்ட நிலையிலும் பொது முடக்கம் அமல் செய்யப்படாது என்றார் அவர்.

பொது மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு வழக்கம் போல அனுமதிக்கப்படும் எனக் கூறிய அவர், நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளை மட்டும் இலக்காக கொண்டு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்படும் என்றார்.


Pengarang :