ALAM SEKITAR & CUACANATIONALPBT

கோல லங்காட்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 7,000 பேர் உதவித் தொகை பெற்றனர்

ஷா ஆலம், ஜன 25- கோல லங்காட் மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 6,904 குடும்பங்கள் மாநில அரசின் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளன.

முதல் கட்ட நிதியளிப்பு நிகழ்வில் 1,465 பேரும் இரண்டாம் கட்ட நிகழ்வில் 5,439 பேரும் இந்த நிதியைப் பெற்றதாக கோல லங்காட் மாவட்ட அதிகாரி முகமது ஜூஸ்னி ஹஷிம்  கூறினார்.

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கம்போங் புக்கிட் சங்காங், கம்போங் லபோஹான் டாகாங், கம்போங் ஆர்டிபி புக்கிட் சங்காங் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களில் 70 விழுக்காட்டினருக்கு இதுவரை உதவி நிதி வழங்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.

மாநில அரசின் இந்த வெள்ள உதவித் திட்டத்திற்கு இதுவரை 10,967 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறிய அவர், இன்னும் விண்ணப்பம் செய்யாதவர்கள் இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் தங்கள் மனுபாரங்களை அனுப்பி விடும்படி கேட்டுக் கொண்டார்.

இந்த நிதியளிப்பு நிகழ்வுக்கு வர முடியாதவர்கள் மாவட்ட மற்றும் நில அலுவலகத்திற்கு நேரில் வந்து உதவித் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :