ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வாகனமோட்டிகள் தவறிழைத்தால் பயிற்சி தந்த பள்ளிகளுக்கு தண்டனை

கோத்தா பாரு, ஜன 31- குறிப்பிட்ட வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளி வாயிலாக லைசென்ஸ் பெற்றவர்கள் அதிகளவில் விபத்துகளில் சம்பந்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அந்த பயிற்சிப் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும் அல்லது முடக்கப்படும்.

சம்பந்தப்பட்ட பயிற்சிப் பள்ளிகளை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக பயிற்சி வழங்கிய பள்ளிகளின் குறியீட்டு எண் வாகனமோட்டும் லைசென்சில் பதிக்கப்படும் என்று சாலை போக்குவரத்து துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஜைலானி ஹஷிம் கூறினார்.

எனினும், இத்திட்டம் இன்னும் பரிந்துரை வடிவிலே உள்ளதாக கூறிய அவர், வரும் ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவிருக்கும் இ-டெஸ்டிங் முறையில் இது சேர்க்கப்படும் என்றார்.

வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளி பயிற்றுநர்களுக்கான சான்றிதழ் பயிற்சியை நேற்று இங்கு முடித்து வைத்தப்  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

எண்பது விழுக்காட்டு சாலை விபத்துகளுக்கு மனித தவறே காரணம் என்று அரச மலேசிய போலீஸ் படையின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்க பிரிவு மற்றும் சாலை போக்குவரத்து இலாகா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விபத்துகளில் அதிக எண்ணிக்கையில் அதாவது 60 விழுக்காட்டு மோட்டார் சைக்கிள்களே சம்பந்தப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.


Pengarang :