ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 4,915 ஆகப் பதிவானது

கோலாலம்பூர், ஜன 31– நாட்டில் கடந்த மூன்று தினங்களாக ஐயாயிரத்திற்கும் மேல் பதிவாகி வந்த கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 4,915 ஆகப் பதிவானது.

இந்த புதிய தொற்றுக்களுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 65 ஆயிரத்து 984 ஆக உயர்வு கண்டுள்ளது.

நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 39 பேர் கடுமையான தாக்கம் கொண்ட மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் எஞ்சியோர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

புதிதாக பதிவான 4,915 சம்பவங்களில் 188 வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவியவை என்றும் எஞ்சிய 4,727 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை என்றும் அவர் தெரிவித்தார். மொத்தம் 120 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 65 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்த நோய்த் தொற்றிலிருந்து நேற்று 3,056 பேர் குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 80 ஆயிரத்து 771 ஆக உயர்வு கண்டுள்ளது.

நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 14 நோய்த் தொற்று மையங்களுடன் சேர்த்து நாட்டில் தீவிரமாக உள்ள நோய்த் தொற்று மையங்களின் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :