ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தடுப்பூசி பெற 500,000 சிறார்கள் பதிவு- கைரி தகவல்

கோலாலம்பூர், பிப் 2- கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கு நேற்று வரை 517,107 சிறார்கள் பதிவு செய்துள்ளனர். 5 முதல் 11 வயது வரையிலான இச்சிறார்களுக்கு பைசர் தடுப்பூசியைச் செலுத்துவதற்கு அவர்களின் பெற்றோர்கள் பதிந்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர்  கைரி ஜமாலுடின் கூறினார்.

நாட்டிலுள்ள மொத்தம் 36 லட்சம் சிறார்களில் 15 விழுக்காட்டை இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கிறது என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

இது ஒரு நல்ல தொடக்கமாகும். தடுப்பூசி பெறுவதில் உள்ள நன்மைகள் குறித்த தகவல்களை சுகாதார அமைச்சு தொடர்ந்து வழங்கி வரும் என அவர் சொன்னார்.

இம்மாத இறுதிக்குள் நாட்டிலுள்ள சிறார்களில் ஏறக்குறைய பாதிப்பேர் தடுப்பூசியைப் பெற்றிருப்பர் என்றும் அவர் சொன்னார்.

இந்த இலக்கை அடைவதை உறுதி செய்வதில் துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கல்வியமைச்சுடன் இணைந்து செயல்படுவார் என அவர் குறிப்பிட்டார்.

ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கம் நாளை 3 ஆம் தேதி தொடங்கி கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையங்களில் மேற்கொள்ளப்படும்.

நாட்டிலுள்ள பன்னிரண்டு வயதுக்கும் கீழ்ப்பட்ட சுமார் 40 லட்சம் சிறார்கள் இந்த தடுப்பூசியைப் பெற தகுதி பெற்றுள்ளனர். 


Pengarang :