ECONOMYNATIONALPBTPENDIDIKAN

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாநில அரசு தொடர்ந்து உதவி

 ஷாஆலம், பிப் 5- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் பற்றுச் சீட்டு உதவி மக்களின் பிரச்னைகளை மாநில அரசு விரிவான கண்ணோட்டத்தில் பார்ப்பதை உணர்த்துகிறது.

மாநில அரசின் பத்துவான் பங்கிட் சிலாங்கூர் உதவி நிதியை அண்மையில்தான் பெற்ற நிலையில் இந்த பற்றுச் சீட்டு தொடர்பான அறிவிப்பு தமக்கு பெரும் வியப்பை அளித்ததாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஹஸ்னிடா மாட் ட்ருஸ் கூறினார்.

எங்கள் குடும்பத்தில் பள்ளி செல்லும் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இத்தகையச் சூழலில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உதவிகளை நல்கிய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

மாநில அரசு மக்களின் தேவைகளை குறுகிய கண்ணோட்டத்தில் அல்லாமல் விரிவான கண்ணோட்டத்தில் பார்ப்பதை இந்த உதவி புலப்படுத்துகிறது என்றார் அவர்.

இத்தகைய உதவியை பொது மக்கள் குறிப்பாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் பள்ளி செல்லும் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்கள் பெரிதும் எதிர்பார்த்ததாக லோரி ஓட்டுநரான எஸ். லோகேஸ்வரன் (வயது 40) தெரிவித்தார்.

 மாநில அரசின் இந்த உதவி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எங்கள் சுமையை ஓரளவு குறைக்க உதவுகிறது. பள்ளி செல்லும் பிள்ளைகள் விஷயத்திலும் கவனம் செலுத்திய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

இத்தகைய உதவி இல்லாத பட்சத்தில்  வசதி குறைந்த பெற்றோர்களில் சிலர்  பிள்ளைகளின் கல்வித் தேவைக்காக கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சிலாங்கூர் பள்ளி சீருடைத் திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் பணி இம்மாதத்தின் மூன்றாம் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.

Pengarang :