ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மலேசிய தன்னார்வலர் சேவைத் திட்டத்தை டத்தோஸ்ரீ அன்வார் தொடக்கி வைத்தார்

ஷா ஆலம், பிப் 7- பேரிடரின் போது பொது மக்களின் நலனை காப்பதற்காக மலேசியாவுக்கான தன்னார்வலர் சேவைத் திட்டத்தை (ஹிட்மாட் உந்தோக் மலேசியா) எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தொடக்கி வைத்தார்.

செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பின் உருவாக்கத்தின் தொடர்ச்சியாக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் கூறினார். 

மக்களின் துயரத்தையும் சுமையையும் குறைப்பதையும் உறுப்பினர்கள் மத்தியில் மனிதாபிமான உணர்வை ஏற்படுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெள்ளம் ஏற்பட்ட போது அதிகமான இளைஞர்கள் மக்களுக்கு உதவ முன்வந்ததைக் நான் கண்டேன். பாதிக்கப்பட்ட இடங்களில் குறிப்பாக சிலாங்கூரில் வெள்ளம் பாதித்த இடங்களில் எண்ணற்ற இளைஞர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மீது கருணை கொண்டு அவர்களுக்கு உதவும் பணியில் அயராது ஈடுபட்டதை கண்டு நெகிழ்ந்து போனேன் என்றார் அவர்.

இளைய தலைமுறையினரின் இந்த முயற்சியைத் தொடரும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் ஆகியோரை தாம் கேட்டுக் கொண்டதாக அவர் சொன்னார்.

செர்வ் தன்னார்வலர் அமைப்பின் சிறப்பான சேவையை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை  நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தவிருக்கிறோம்  என்று கெஅடிலான் கட்சித் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

செர்வ் தன்னார்வலர் அமைப்பின் 700 உறுப்பினர்களை பாராட்டும் விதமாக நேற்று இங்கு நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போது அன்வார் இவ்வாறு கூறினார்.


Pengarang :