ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 சம்பவங்களில் 99 விழுக்காடு ஒன்றாம், இரண்டாம் கட்டப் பாதிப்பு கொண்டவை

ஷா ஆலம், பிப் 8- கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் இம்மாதம் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பதிவான கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களில் 99 விழுக்காடு ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை கொண்டவையாகும்.

லேசான நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் கட்டில்களின் பயன்பாடு குறைவாக  உள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

நோய்த் தொற்று எண்ணிக்கை முந்தைய வாரங்களைக் காட்டிலும் தற்போது நான்கு விழுக்காடு அதிகரித்துள்ள போதிலும் மொத்தம் உள்ள 9,776 கட்டில்களில் 33 விழுக்காடு மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 நோயாளிகளுக்கான கட்டில்கள் பயன்பாடு தொடர்பான விபரங்கள் வருமாறு-

– தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 850 கட்டில்களில் 14 விழுக்காடு அல்லது 116 பயன்படுத்தப்படுகின்றன.

– முழு கோவிட்-19 சிகிச்சைக்கு 9 மருத்துவமனைகளையும் கலவையான சிகிச்சைக்கு  111 மருத்துவமனைகளையும் சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

10,810 படுக்கைகள் கொண்ட குறைந்த நோய்த் தாக்கம் கொண்டவர்களுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

– 335 அல்லது 0.8 விழுக்காட்டு நோயாளிகள் மட்டுமே மூன்று முதல் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.


Pengarang :