ECONOMYMEDIA STATEMENTSELANGOR

முட்டை, இறைச்சி, மீனுக்கு உச்சவரம்பு விலை – சிலாங்கூர் அரசு திட்டம்

ஷா ஆலம், பிப் 8– மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக கோழி முட்டை, மாட்டிறைச்சி மற்றும் மீன் போன்ற உணவுப் பொருள்களுக்கு உச்ச வரம்பு விலையை நிர்ணயிக்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.

கோழியை கிலோ 8.00 வெள்ளிக்கு விற்பனை செய்யும் திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து கிடைத்து வரும் ஆதரவின் அடிப்படையில் இத்திட்டம் பரிந்துரைக்கப்படுவதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

நோன்புப் பெருநாள் வரை அமல்படுத்தபடுத்தக்கூடிய புதிய திட்டம் இதுவாகும். தொடக்கமாக இத்திட்டத்தின் கீழ் கோழிக்கான உச்சவரம்பு விலையை நிர்ணயித்துள்ளோம். அதனைத் தொடர்ந்து கோழி முட்டை, மாட்டிறைச்சி மற்றும் சில வகை மீன்களுக்கும் விலை வரம்பை நிர்ணயிக்கவுள்ளோம் என்றார் அவர்.

விற்கப்படும் உணவுப் பொருள்கள் தரமுடையதாகவும் அதன் விலை  வரம்பிற்குட்பட்டதாகவும் இருப்பது உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இங்குள்ள பி.கே.பி.எஸ் கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண் சாதனையாளர் விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

தற்போது இரு இடங்களில் மலிவு விலையில் கோழி விற்பனை மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், மேலும் அதிகமானோர் பயன் பெறும் வகையில் இத்திட்டம் மற்ற பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என்றார்.


Pengarang :