ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 : பொருளாதார நடவடிக்கைகளை சிலாங்கூர் மூடாது- எஸ்.ஒ.பி. அமலாக்கத்தில் கவனம் செலுத்தப்படும்

ஷா ஆலம், பிப்  8– கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பின் காரணமாக எந்தவொரு பொருளாதார நடவடிக்கையையும் சிலாங்கூர் அரசு மூடாது. மாறாக, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) முறையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதில் அது கவனம் செலுத்தும்.

மாநிலத்தில் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இன்னும் வாய்ப்பு உள்ளதோடு பெரியவர்கள் மற்றும் இளையோர் மத்தியில் தடுப்பூசி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்தாண்டு செப்டம்பர்  மற்றும் அக்டோபர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் மருத்துவமனைகளில் கட்டில்களின் பயன்பாடு இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் சொன்னார்.

அதே சமயம், நோய்த் தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எஸ்.ஒ.பி. விதிமுறை அமலாக்கத்திற்கு நாம் மீண்டும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  எந்தவொரு பொருளாதார நடவடிக்கையையும் மூடுவது தற்போதைய தேர்வாக அமையாது என்றார் அவர்.

முன்பு தினசரி மரண எண்ணிக்கை 190 முதல் 200 வரை இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 9 ஆக குறைந்து விட்டது. எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக கடைபிடிக்க பொதுமக்களை எவ்வாறு வலியுறுத்துவது என்பதுதான் தற்போதைய கேள்வி என்று அவர் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற மாற்றும் சலுகை கொண்ட கடனுதவிக்கான கடிதங்களை வழங்கும் நிகழ்வுக்கு செய்தியாளர்களிடம் அவர் இதனைச் சொன்னார்.


Pengarang :