ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி, ஊக்கத் தடுப்பூசியை விரைந்து பெறுவீர்- மக்களுக்கு மாமன்னர் வலியுறுத்து

கோலாலம்பூர், பிப் 8- கோவிட்-19 தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் அதனை விரைந்து பெறும்படி மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக ஊக்கத் தடுப்பூசியையும் விரைந்து பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாடு கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து இன்னும் விடுபடவில்லை. ஆகவே, கோவிட்-19 நோய்த் தொற்று பரவலை முறியடிக்கும் விதமாக எனது அரசாங்கம் வகுத்துள்ள வழிகாட்டிகளையும் விதிமுறைகளையும் நான் அனைவரும் ஒன்றிணைந்து கடைபிடிப்போம் என அவர் கூறினார்.

2022 கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற உயரிய விருதுகள் மற்றும் பட்டங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது மாமன்னர் இதனைத் தெரிவித்தார்.

ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் இந்த விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.

கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு இந்நிகழ்வில் 263 பேருக்கு உயரிய விருதுகள், பட்டங்கள் மற்றும் பதக்கங்களை மாமன்னர் வழங்கினார்.

மலேசியர்கள் அனைவரும் ஒருமைப்பாட்டை வளர்க்கவும் பிரிவுகளை தவிர்க்கவும் உறுதி கொள்ள வேண்டும் என்றும் அவர் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் இறையாண்மை தொடர்ந்து கட்டிக்காப்பதை உறுதி செய்வதில் ஒருமைப்பாட்டு உணர்வு, ருக்குன் நெகரா கோட்பாடுகளை பின்பற்றி நடக்கும் உணர்வு ஆகியவை வலுவான அடித்தளமாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :