ECONOMYPBTSELANGOR

ஸ்ரீ செத்தியா தொகுதியைச் சேர்ந்த 64 மாணவர்கள் பள்ளி உதவிப் பொருள்களைப் பெற்றனர்

பெட்டாலிங் ஜெயா, பிப் 9– ஸ்ரீ செத்தியா தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த 64 மாணவர்கள் நேற்று பள்ளி உதவிப் பொருள்களைப் பெற்றனர்.

அம்மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை, காலணி, எழுது பொருள்கள், புத்தகப் பை உள்ளிட்ட பொருள்களை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பெர்ஹாட் நிறுவனம் வழங்கியது.

வசதி குறைந்த பெற்றோர்கள் எதிர்நோக்கும் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

இது தொகுதி மக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது சுற்று உதவித் திட்டமாகும். ஏற்கனவே, எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் ஏற்பாட்டில் 167 மாணவர்களுக்கு பள்ளி உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

இத்திட்டத்தின் வழி பயன்பெறக்கூடிய தகுதியான மாணவர்களை அடையாளம் காணும்படி ஊராட்சி மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஸ்ரீ செத்தியா தொகுதி மக்களுக்கு சளைக்காமல் உதவி புரிந்து வரும் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திற்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம் என்றார் அவர்.

நிறுவன சமூக கடப்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த உதவி பணிக்கு தாங்கள் 10,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் தெரிவித்தார்.


Pengarang :