ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சீனப்புத்தாண்டு காலத்தில் சாலை விபத்துகள் 26 விழுக்காடு குறைந்தன- ஐ.ஜி.பி. தகவல்

கோலாலம்பூர், பிப் 9– இவ்வாண்டு சீனப்புத்தாண்டை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட ஓப்ஸ் செலாமாட் 17 இயக்க அமலாக்க காலத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 26 விழுக்காடு குறைந்துள்ளன.

கடந்தாண்டில் நிகழ்ந்த 15,382 சாலை விபத்துகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு 11,325 விபத்துகளே நிகழ்ந்ததாக தேசிய போலீஸ் படைத்தலைவர் (ஐ.ஜி.பி.) டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி கடந்த சனிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஓப்ஸ் செலாமாட் நடவடிக்கையின் போது மரண விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக அவர் சொன்னார்.

கடந்தாண்டு இக்காலக்கட்டத்தில் 133 மரண விபத்துகள் நிகழ்ந்த வேளையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 19 விழுக்காடு குறைந்து 108 ஆகப் பதிவானதாக அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டில் 149 ஆக இருந்த விபத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இவ்வாண்டு 20 விழுக்காடு குறைந்து 119 ஆகப் பதிவாகியுள்ளது என்றார் அவர்.

மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பயணம் செய்வோரே விபத்துகளில் அதிகம் மரணமடைந்ததாக கூறிய அவர், இத்தரப்பினர் சம்பந்தப்பட்ட மரண எண்ணிக்கை 82 ஆகும் என்றார்.

எனினும், கடந்தாண்டில் 97 ஆக இருந்த மரண எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு 15 விழுக்காடு குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்ஸ் செலாமாட் சோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் சம்சிங் நடவடிக்கையில் போதைப் பொருளைப் பயன்படுத்திய 37 பேர் உள்பட 351 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இது தவிர குடிபோதையில் வாகனமோட்டிய 351 பேரும் இக்காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், பலவேறு சாலைக் குற்றங்களுக்காக 308,726 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 14 விழுக்காடு அதிகமாகும் என்றார்
அவர்.


Pengarang :