ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிறந்த வர்த்தக சூழலை உருவாக்க சிலாங்கூர் அரசு தொடர்ந்து பாடுபடும்- மந்திரி புசார்

பெட்டாலிங் ஜெயா, பிப் 9– சிலாங்கூரில் சிறந்த வர்த்தக மற்றும் முதலீட்டுச் சூழலை உருவாக்க மாநில அரசு உரிய பங்கினை தொடர்ந்து ஆற்றி வரும்.

கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் வெள்ளப் பேரிடர் போன்ற சவால்மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்சிப் பாதைக்கு கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கையாக இது அமைகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் கூறினார்.

வர்த்தகம் புரிவதற்கு சிறப்பான சூழலை உருவாக்கித் தரும் நாடுகள் பட்டியலில் மலேசியா 12வது இடத்தில் உள்ளதை 2020 ஆம் ஆண்டு உலக வங்கி குழுமத்தின் ஆய்வு காட்டுகிறது. ஆகவே, சிலாங்கூரில் வர்த்தகம் புரிவதற்குரிய சிறந்த சூழலை நம்மால் உருவாக்கித் தர முடியும் என நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் வாயிலாக அனைத்து மக்களுக்கும் அமைதியும் சுபிட்சமும் நிறைந்த இடமாகவும் எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடிகளை கையாளக்கூடிய மாநிலமாகவும் நம்மால் விளங்க முடியும் என்பது திண்ணம் என்றார் அவர்.

இங்குள்ள ஷெரட்டன் ஹோட்டலில் நேற்றிரவு நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிலையிலான சீனப்புத்தாண்டு விருந்து நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், முதலீட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம், இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் இட்ரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிலாங்கூரில் 182 முதலீட்டுத் திட்டங்களுக்கு மிடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமிருடின் சொன்னார்.

இந்த முதலீடுகளின் வாயிலாக சிலாங்கூரில் 12,226 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சிலாங்கூரே அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக விளங்குகிறது என்றார் அவர்.


Pengarang :