ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் அரசின் இரு வர்த்தக திட்டங்கள் மூலம் பயனடைந்தேன்- பிரியாணி வணிகர் ரமேஷ் பெருமிதம்

கிள்ளான், பிப் 10– சிலாங்கூர் அரசின் இரு வரத்தக உதவித் திட்டங்கள் மூலம் தாம் பயனடைந்ததாக பிரியாணி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் எஸ். ரமேஷ் (வயது 56) பெருமிதத்துடன் கூறினார்.

அவ்விரு வர்த்தக விண்ணப்பங்களும் அவ்வளவு எளிதில் அங்கீகரிக்கப்படும் என தாம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

மாநில அரசின் ஒரு திட்டத்தின் மூலம் மட்டும் அல்லாமல் இரு திட்டங்கள் வாயிலாக உதவி கிடைத்தது எனக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது என்றார் அவர்.

“சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் மாநில இந்திய தொழில் ஆர்வலர் மையம் வாயிலாகவும் சிலாங்கூர் ஹிஜ்ரா அறவாரியத்தின் மூலமாகவும் தங்களுக்கு வர்த்தக உதவி நல்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த பிரியாணி வியாபாரத்தை என் மனைவி திருமதி ஜி. இந்திராவுடன் (வயது 50) இணைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடக்கினேன். சில மாதங்களுக்குப் பின்னர் ஹிஜ்ரா அறவாரியம் மூலம் நான் செய்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது. பிறகு “சித்தம்” திட்டத்தின் வாயிலாக வர்த்தக உபகரணங்கள் பெறுவதற்கு விண்ணப்பித்தேன். வாகன உணவு அங்காடி வியாபாரம் செய்வதற்கு விண்ணப்பிக்கும்படி அவர்கள் பரிந்துரைத்தனர். அதிர்ஷ்டவசமாக அவ்விரு விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றார் அவர்.

எங்கள் வியாபாரத்தை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தந்த மாநில அரசுக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்று சிலாங்கூர் கினியிடம் ரமேஷ் தெரிவித்தார்.

தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தலைமையில் நேற்று கிள்ளான், புக்கிட் திங்கியில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 9,000 வெள்ளி மதிப்பிலான வர்த்தக உபகரணங்கள் மற்றும் உணவு விற்பனை வாகனம் ஆகியவற்றை ரமேஷ் பெற்றுக் கொண்டார்.

வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வமுள்ள இந்தியர்களுக்கு வர்த்தக வழிகாட்டி, மானியம் மற்றும் உபகரணங்களை வழங்குவதை இலக்காக கொண்டு “சித்தம்“ அமைப்பு கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.


Pengarang :