ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

நாளை முதல் அனைத்து தொகுதிகளிலும் மலிவு விலையில்  கோழி விற்பனை

ஷா ஆலம், பிப் 13-  கோழி மற்றும் முட்டை விலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாளை 14 ஆம் தேதி தொடங்கி பொது மக்கள் கிலோ 8.00 வெள்ளி விலையில் அந்த கோழிகளை பெற்றுக் கொள்ளலாம்.

குவாங் மற்றும் ரவாங்கில் தொடங்கும் இத்திட்டம் வரும் மார்ச் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) தலைமை செயல் முறை அதிகாரி டாக்டர் முகமது கைருள் முகமது ராஸி கூறினார்.

லோரி ஏசான் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த மலிவு விலை விற்பனைத் திட்டத்தில் கோழியோடு முட்டை, பழங்கள் மற்றும் காய்கறிகளும் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த லோரிகள் ஊராட்சி மன்றங்களின் உதவியுடன் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

இதனிடையே, சிலாங்கூர் மொத்த விற்பனை சந்தை மற்றும் இங்குள்ள விஸ்மா பி.கே.பி.எஸ்.சில் மேற்கொள்ளப்படும் விலைக் கட்டுப்பாட்டு விற்பனைத் திட்டத்தின் கீழ் இதுவரை 2,186 கிலோ கோழிகள் விற்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விரு இடங்களிலும் போதுமான கோழிகள் கையிருப்பில் உள்ளதால்  கோழி பற்றாக்குறை குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.  தினசரி 500 கோழிகள் வரை விற்பனைக்காக தயார் செய்கிறோம் என்றார் அவர்.

 


Pengarang :