ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

எஸ்.பி.எம். தேர்வின் போது இடைநிலைப் பள்ளிகளை வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்

கோலாலம்பூர், பிப்  14- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் இடை நிலைப்பள்ளிகளை வாக்களிப்பு மையங்களாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதில் கல்வியமைச்சு உறுதியாக உள்ளது.

இடைநிலைப்பள்ளிகளை வாக்களிப்பு மையங்களாகப் பயன்படுத்துவதால் எஸ்.பி.எம். தேர்வுக்காக செய்யப்பட்டுள்ள நுணுக்கமான முன்னேற்பாடுகளை திசை மாறிப் போகச் செய்துவிடும் என்று கல்வி மூத்த அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் கூறினார்.

இவ்வாண்டில் எஸ்.பி.எம். தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களே கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக கல்வி அதிகம் பாதிக்கப்பட்டத் தரப்பினராவர் என்றும் அவர் சொன்னார்.

தேர்வு மையங்கள் அல்லது அறைகளில் மேசைகள் எண் குறியீட்டின் படி முறையாக ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் செய்யும் மாற்றங்கள் மாணவர்களின் தேர்வு முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகளும் எஸ்.பி.எம். தேர்வுக்கு பயன்படுத்தப்படவுள்ளதோடு வியாழக்கிழமை அதாவது தேர்தலுக்கு முதல் நாளன்று கணிதப் பாடத்திற்கான தேர்வு நடைபெறவுள்ளது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பப் பள்ளிகளை வாக்களிப்பு மையங்களாகப் பயன்படுத்துவதில் கல்வியமைச்சுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

மார்ச் மாதம் 2 முதல் 29 ஆம் தேதி வரை எஸ்.பி.எம். தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் அக்காலக்கட்டத்தில் ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வாக்களிப்பு மையங்களாக இடைநிலைப்பள்ளிகளைப் பயன்படுத்த வேண்டாம் என கோரும் கடிடதத்தை கல்வியமைச்சு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவுள்ளதாக ரட்ஸி கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார்.


Pengarang :