ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

மார்ச் முதல் வெப்ப வானிலை- காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சிலாங்கூர் நடவடிக்கை 

ஷா ஆலம், பிப் 15– சிலாங்கூரில், குறிப்பாக கிள்ளான் ஜோஹான் செத்தியா பசுமை புரட்சி திட்ட பகுதி மற்றும் தென் கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அகியவற்றில் திறந்தவெளி தீயிடல் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) மாநில அரசு வரைந்து வருகிறது.

வெப்ப வானிலையை எதிர்கொள்வதற்கு  முன்னேற்பாடாக இவ்விவகாரம்  தொடர்பில் மாநில சுற்றுச் சூழல் இலாகாவுடன் வரும் மார்ச் முதல் தேதி சந்திப்பு நடத்தப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தொழிநுட்பத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார்.

வரும் மார்ச், ஏப்ரல், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் வெப்ப வானிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, அக்காலக்கட்டத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை விவாதிப்பதற்காக இந்த சந்திப்பு நடத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் தீச்சம்பவங்கள் ஏற்படும் போது தீயை அணைப்பதற்கு தேவையான நீரைப் பெற ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும் என்றார் அவர்.

தற்போது கிள்ளான், ஜோஹான்  செத்தியா  பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீச்சம்பவங்கள் ஏற்பட்டது குறித்து தமது தரப்பு புகார்களைக் பெற்றுள்ளதாக கூறிய அவர், எனினும் அதன் பாதிப்பு அவ்வளவு கடுமையானதாக இல்லை என்றார்.

கிள்ளான், ஜோஹான் செத்தியா பசுமைப் புரட்சித் திட்டப் பகுதியில் தீச்சம்பவங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து தேசிய திறந்தவெளி தீயிடல் செயல்திட்டத்தை மாநில சுற்றுச்சூழல் துறை கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி மீண்டும் செயல்படுத்தத் தொடங்கியது.


Pengarang :